பெரியகுளம் பாலு இராமச்சந்திரன்

என் வீட்டுத் தோட்டத்தின் எழில் மலர்கள் !

வியாழன், 13 பிப்ரவரி, 2020

வள்ளுவத்தில் வாய்மை !


வள்ளுவத்தில் வாய்மை !

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

உண்மை, வாய்மை, மெய்ம்மை மூன்றுமே ஒன்று போல் தோன்றும்; ஆனால் அவற்றுக்கிடையே பொருள் வேறு பாடு இருக்கிறது. இதைப் புரிந்து கொண்டு ஒழுகுதல் மாந்தர்க்குச் சிறப்பைத் தரும் !

கதிரவன் வானில் நிலை கொண்டிருப்பது உண்மை ! அதை உள்ளது உள்ளபடி அப்படியே எடுத்து உரைப்பது வாய்மை ! கதிரவன் இல்லையேல் இவ்வுலகில் உயினங்களே இருக்க முடியாது என்பது மெய்ம்மை !

வாய்மையைப் பற்றி வள்ளுவர் பத்து குறள்களைப் படைத்து இருக்கிறார். யாருக்கும் தீமை விளைவிக்காத செய்திகளை நாம் சொல்வதும் (01), பொய்தான் என்றாலும் கூட அதனால் நன்மை விளையுமெனில், அதைச் சொல்வதும் (02), வாய்மையே என்கிறார் வள்ளுவர் !

மனதில் இருப்பதை ஒளிக்காமல் உரைக்கும் செயல், தவமும் தானமும் செய்வதை விட உயர்வானது (03) என்பது அவரது உயரிய நோக்கு. அதே போல், மனிதன் தன் உடல் அழுக்கை நீரால் கழுவலாம்; ஆனால் உள்ளத்து அழுக்கை வாய்மையால் தான் அகற்றமுடியும் (04) என்று அவர் இன்னொரு குறள் மூலம் உலகுக்கு அறிவிக்கிறார் !

உலகத்தோரே ! யாம் உய்த்து உணர்ந்தவற்றுள், வாய்மையைப் போல் சிறப்பித்துக் கூறும் தன்மைகள் உள்ளவை வேறெதும் இவ்வுலகில் இல்லை (05) என்று எத்துணை அழுத்தமாகப்ப் பத்தாவது குறளில் பகர்கிறார் நம் செந்நாப் போதார் !

வாய்மைஎன்பதற்கு வள்ளுவரைப் போல் இலக்கணம் கூறுபவர் வேறு யாரும் இருக்க முடியாது. தமிழ் மறை தந்த இத் தகவுடை அறிஞன் வழியில் நடப்போம். நன்மைகளை அடைவோம் ! வாழ்க வள்ளுவம் ! வாழிய செந்தமிழ் !

----------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
பாலு இராமச்சந்திரன்.
(bramachandra83@gmail.com)
ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்.
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி.2051,கும்பம்,(மாசி)01]
{13-02-2020}
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக