பெரியகுளம் பாலு இராமச்சந்திரன்

என் வீட்டுத் தோட்டத்தின் எழில் மலர்கள் !

செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

துளசிச் செடி

                                                                        





















மூலிகைப் பெயர்......................துளசி    

மாற்றுப்பெயர்கள்.....................திருத்துழாய்,துளவுகுல்லை,வனம்,..விருந்தம்,
    
...........................................................பிருந்தை, மாலலங்கல், அரிஇராம.துளசி,
    
...........................................................கிருஷ்ண துளசி, துழாய்
    
தாவரவியல் பெயர்..................OCIMUM SANCTUM
    

ஆங்கிலப்பெயர்..........................HOLY BASIL, SACRED BASIL


சுவை...............................................கார்ப்பு
    

தன்மை...........................................வெப்பம்


துளசி இலை :- உட்கொண்டால் உடலில் வெப்பமுண்டாக்கும். கோழை
                
                அகற்றும். வியர்வை பெருக்கும்

துளசி விதை:-......உள் அழல் ஆற்றும்
              
துளசி வகைகளும் மருத்துவக் குணங்களும்


நற்றுளசி:-........ வயிற்றுளைச்சல், எலும்பைப் பற்றிய சுரம், நீர் வேட்கை,
              
              மாந்தம், சுவையின்மை ஆகியவை நீங்கும்.


நிலத்துளசி :- கணச்சூடு, அழல் நோய்கள், அழல் சுரம், மாந்தம், மாந்த
              
              சுரம் நீங்கும்

நாய்த்துளசி :..குத்திருமல், கோழை, பித்தம் வாதம் சிலேத்துமம்
              
              தொடர்பான நோய்கள் நீங்கும்

கல்துளசி :.......தீச்சுரம், கட்டி, வண்டுகடி,சிறுபாம்புக்கடி ஆகியவை
              
              நீங்கும்

முள்துளசி :-....எலிநஞ்சு, வெட்டுப்புண், கபம் நீங்கும். நஞ்சுகள்
              
              கிளைக்காது.

செந்துளசி :சிறு நஞ்சு, , மயக்க உணர்வு, பித்தம் வாதம், சிலேத்தும
              
              நோய்கள் நீங்கும்

கருந்துளசி :- இருமல், இரைப்பு, நெஞ்சில் கோழை சேருவதனால்

              உண்டாகும் குறு குறுவென்கிற ஒலி வயிற்றுப் புழு,
              இருமலினால் ஏற்படும் கேவல், மார்புச்சளிசூலை,  

              நஞ்சு ஆகியவை நீங்கும்

01. துளசி இலையைப் பாலில் இட்டுக் காய்ச்சி உண்டால், பாலினால் சிலருக்கு ஏற்படக் கூடிய தொந்தரவுகள் நீங்கும்.

02. துளசி இலையை உலர்த்திப் பொடித்து மூக்கில் இட்டால் புழுக்கள் வெளிப்படும்.

03. துளசி இலையைப் பிட்டு போல் அவித்துச் சாறெடுத்து சிறிது கோரோசனை சேர்த்து குழந்தைகட்குப்  புகட்டினால் இருமல் தீரும்

04. தண்ணீர் சேர்த்துக் காய்ச்சி வியர்வை பிடித்தாலும், தலை முழுகச் செய்தாலும் மயக்க உணர்வு நீங்கும்

05. துளசி நீரையும் இலையையும் உட்கொள்வதால் கோழை ஒழிவதுடன் சளியும் குறையும்.

06. இலை, கதிர்களுடன் வாட்டிப் பிழிந்த சாறு காலை மாலை 2 துளி வீதம் காதில் விட்டுவர 10, 15 நாட்களில் காது மந்தம் தீரும்.

07. இலைச் சாறு 1 மி.லி. தேன் 5 மி.லி. வெந்நீர் 5 மி.லி. கலந்து காலை மாலை 20 முதல் 40 நாள்கள் சாப்பிட  இதய நோய் சாந்தமாகும்.

08. கருந்துளசி 1 பிடி, மருதம் பட்டை 40 கிராம் சிதைத்துப் போட்டு 1 லிட்டரைக் கால் லிட்டராகக் காய்ச்சி வடித்து 2 தேக்கரண்டி தேன் கலந்து 1 முடக்கு வீதம் நாளைக்கு 6 வேளை  20 நாள்கள் சாப்பிட்டு வர சீரற்ற இதயத் துடிப்பும், இதயத்தைக் கட்டிப் பிடிப்பது போன்ற வலியும் குறையும்.

09. துளசி 50 கிராம், மிளகு 20 கிராம் மையாய் அரைத்து பயறு அளவு மாத்திரை ஆக்கி காலை மாலை வெந்நீரில் இழைத்துக் கொடுக்கச் சகல விதக் காய்ச்சலும் தீரும்.

10. சிறுகுழந்தைகளுக்குத் தலைக்குத் தண்ணீர் ஊற்றும் போது ஒரு கைப்பிடி துளசி இலைகளை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து அந்த தண்ணீரைத் தலைக்கு ஊற்றினால் சளிபிடிக்காது

11. குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமலுக்கு துளசிச் சாற்றுடன் இஞ்சிச் சாறும், தேனும் கலந்து கொடுத்து வந்தால் அவை தீரும். .(Harish)

12. துளசி இலையுடன் மிளகு, சுக்கு சேர்த்து கசாயம் வைத்து 30 மி.லி. குடித்து வந்தால் இருமல் குணமாகும். .(Harish)

13. துளசி இலையை நீர் விட்டு நன்கு அரைத்து தலையில் பற்று இடுவதால், தலை பாரமும், தலை வலியும் குறையும். .(Harish)

14. துளசி இலையைக் கசக்கி அதனுடன் மஞ்சள் தூள், நொச்சி இலை,, எலுமிச்சை விதை சேர்த்து, கொதிக்க வைத்து  ஆவி பிடித்தால் தலையில் உள்ள நீர் இறங்கும். .(Harish)

15. துளசி இலையையும், புதினா இலையையும் நன்கு நிழலில் உலர்த்தி, பொடி செய்து வைத்துக் கொண்டு, அதனுடன் கிராம்புத் தூள் சேர்த்து பல் துலக்கினால் ஈறு வீக்கம், பல் வலி தீரும். .(Harish)

16. துளசி இலையைத் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து, வாய் கொப்பளித்து வந்தால், வாயில் ஏற்படும் துர்நாற்றம் அகலும். .(Harish)

17. வெள்ளைபடுதலுக்கு, துளசிச் சாறு 2 தேக்கரண்டி எடுத்து சோறு வடித்த நீரில் கலந்து தினமும் கொடுத்து வர வேண்டும். .(Harish)

18. துளசி இலையை மை போல் அரைத்து முகத்தில் தடவிக் கழுவி வர முகம் பொலிவு பெறும். .(Harish)

19. துளசி இலையை எலுமிச்சம் பழச் சாறுடன் அரைத்து உடலில் தேய்த்துக் குளித்து வந்தால் படை, சொறி நீங்கும். .(Harish)

20. உடலில் ஏற்படும் எரிச்சலுக்கு துளசி இலையுடன் அறுகம் புல், மஞ்சள் ஆகியவை சேர்த்து அரைத்துக் குளித்து வர வேண்டும். .(Harish)

21. ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளைப் பறித்து 200  மி.லி. தண்ணீர் சேர்த்து 60 மி.லி.யாகச் சுண்டக் காய்ச்சி அருந்தி வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். .(Harish)

22. தினமும் பத்து துளசி இலைகளை வாயிலிட்டு மென்று தின்றாலும் நீரிழிவு கட்டுப்படும். .(Harish)

23. ஒரு செம்புப் பாத்திரத்தில் துளசி இலைகளைப் போட்டு நீர் ஊற்றி இரவு முழுவதும் ஊறவிட்டு, காலையில் எழுந்து, துளசி இலைகளையும் அது ஊறிய நீரையும் அருந்தி வந்தால் சிறுநீரகக் கற்கள் குறையும். இரத்தம் தூய்மை பெறும். உடலும் புத்துணர்வு அடையும். .(Harish)

24. துளசி  இலைகளுடன் ஐந்து மிளகு சேர்த்து கசாயம் வைத்து 60 மி.லி வீதம் இரண்டு வேளைகள் அருந்தி வந்தால் காய்ச்சல் குறையும். .(Harish)

25. (தொ.எண்.11 – 24 வரை ஆதாரம் :- வேலூர், ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ் மருத்துவ மனை, முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ. ஹரிஷ் அன்புச் செல்வன் M.D.(s), அவர்கள் 11-03-2017 நாளிட்ட தினமலர் நாளிதழின் இணைப்பான பெண்கள் மலரில் எழுதிய கட்டுரை.)

26. துளசி இலை, சிறிதளவு மிளகு கலந்து கசாயம் வைத்து காலை, இரவு குடித்து வந்தால், காய்ச்சல் குறையும். (Asan)

27. ஒரு தம்ளர் தண்ணீரில் பசுமையான துளசி இலைகளை ஊறவைத்து, ஒரு மணி நேரம் கழித்துக் குடித்து வந்தால் நாட்பட்ட வாயு, வயிற்று உப்பிசம், பித்தம் நீங்குகிறது. (Asan)

28. துளசி இலைச்சாறுடன் சம அளவு தும்பைச் சாறு கலந்து ஒரு வாரம் அருந்தி வருபவர்களுக்கு விஷம் எளிதில் இறங்கும். (Asan)

29. சரும நோய்களுக்கு துளசி இலைச்சாறு சிறந்த நிவாரணி. துளசி இலையுடன் எலுமிச்சம் பழச் சாறு கலந்து அரைத்து சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்களுக்குப் பற்றுப் போடலாம். (Asan)

30. துளசியும் உப்பும் சேர்த்து அரைத்து தேமல், படை மீது பூசி வந்தால், அவை விரைவில் நீங்கும். (Asan)

31. தினமும் காலையில் எழுந்ததும்  வெறும் வயிற்றில் துளசி இலை சாப்பிட்டு வந்தால் ,இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். இதய நோய் வராமல் தடுக்கும். (Asan)

32. துளசி இலையை சிறிதளவு பறித்து தினமும் சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும்.. இன்சுலின் சீராகச் சுரக்கப்பட்டு, நீரிழிவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும். (Asan)

33. கிராம்பு, சுக்குடன், துளசிச் சாறு சேர்த்து அரைத்து, நெற்றியில் பற்றுப் போட்டால், தலைவலி தீரும். (Asan)

34. கைப்பிடி அளவு துளசி இலைகள், மிளகு மூன்று , இஞ்சி ஒரு துண்டு எடுத்து மைய அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டாலும் தலைவலி தீரும். (Asan)

35. குப்பை மேனி இலை, துளசி இலை சம அளவு எடுத்து, நிழலில் உலர்த்தி, பொடித்து, ஒவ்வொன்றிலும் அரைத் தேக்கரண்டி எடுத்து, நெய்யில் குழைத்து, தினமும் இரு வேளை சாப்பிட்டு வந்தால், மூலச் சூட்டால் ஏற்படும் கறுப்பு மாறும். (Asan)

36. துளசிச் சாறும், எலுமிச்சைச் சாறும் ஒவ்வொரு தேக்கரண்டி டுத்து சிறிது சூடு படுத்தி, தேன் கலந்து, உணவுக்குப் பின்பு சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறையும். (Asan)

37. துளசி இலை, முருங்கை இலைகளை சம அளவு எடுத்து, சாறு பிழிந்து, ஒவ்வொன்றிலும் அரைத்  தேக்கரண்டி அளவு எடுத்து, சிறிது சீரகப் பொடி கலந்து காலை, மாலை இருவேளைகளும் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், இரத்த அழுத்தம் குறையும். உப்பு, புளி, காரம் உணவில் குறைக்க வேண்டும். (Asan)

38. சுத்தமான செம்புப் பாத்திரத்தில் நல்ல தண்ணீரை ஊற்றி, அதில் ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளைப் போட்டு, எட்டு மணி நேரம் மூடி வையுங்கள். பின்பு , அந்த நீரை வெறும் வயிற்றில் குடியுங்கள். இவ்வாறு 48 நாட்கள் குடித்துப் பாருங்கள். எந்த நோயும் நெருங்காது. தோல் சுருக்கமும் நீங்கும்.  (Asan)

39. (ஆதாரம்: தொ.எண் 26 முதல் 38 வரை: நாகர்கோயில், எஸ். மகாலிங்க ஆசான், 14-08-2016 நாளிட்ட இராணி வார இதழில்  எழுதிய கட்டுரை.)

40. துளசி இலையும் மணித்தக்காளி இலையும் சம அளவு எடுத்து இடித்து, சாறு எடுத்து மூன்று துளிகள் காதில் விட்டால் காது வலி குணமாகும். (051)

41. துளசி இலைச் சாறு, இஞ்சிச் சறு சம அளவு எடுத்து கலந்து 25 மி.லி அளவுக்கு மூன்று வேளைகள் அருந்தினால் ஜலதோஷம் நீங்கும். (108) (159)

42. துளசி இலை, எலுமிச்சை இலை, முருங்கைப் பூ, புடலம்பூ ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைச் சாப்பிட்டால் தீராத தாகமும் தீரும்.  (272)

43. துளசிச் சாறு, கற்கண்டு சேர்த்து காய்ச்சலின் போது கொடுத்து வந்தால் வாந்தி இருப்பின் சரியாகும்.  (281)

44. துளசிச் சாறு, கரிசாலைச் சாறு இரண்டும் கலந்து சில துளிகள் காதில் விட்டு வந்தால் காது வலி, காதில் சீழ் வடிதல் ஆகியவை குணமாகும்.. (308) (1397)

45. துளசி இலைகளைச் செப்புப் பாத்திரத்தில் போட்டு இரவில் நீர் ஊற்றி, இரவு முழுதும் ஊற வைத்து காலை முதல் தொடர்ந்து  பருகி வந்தால்  புத்துணர்ச்சி உண்டாகும்.  (739)

46. துளசி இலைகள் சிலவற்றை எடுத்து சிறிது குங்குமப் பூ சேர்த்து அரைத்துக் கொடுத்து வந்தால் அம்மை நோய் குணமாகும்.  (1005)

47. துளசி இலைகளுடன் சிறிது வேப்பங் கொழுந்தும் சேர்த்து அரைத்து சுண்டைக் காயளவு தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் ஒவ்வாமை (அலர்ஜி) குணமாகும். (1018)

48. துளசிச் சாறு இதய நோய்க்கு மிகச் சிறந்த மருந்தாகும். (1284)

49. துளசி இலைகளைப் பறித்து ஆவியில் அவித்து சாறு பிழிந்து 20 மி.லி. அளவுக்கு அருந்தி வந்தால் நெஞ்சுச் சளி விலகும். (1389)

50. துளசி இலையுடன் இஞ்சி சிறிது சேர்த்து கசாயம் வைத்து அருந்தி வந்தால் சீதளக் காய்ச்சல் குணமாகும்.  (1390)

51. துளசி இலைச் சாறுடன் சிறிது தேன்கலந்து வெந்நீரில் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இதய நோய் சாந்தமாகும்.  (1392)

52. துளசி இலை (கருந்துளசி நல்லது), செம்பருத்திப் பூ இரண்டையும் சேர்த்து கசாயம் வைத்து 10 நாட்கள் அருந்தி வந்தால், இதயத்தில் சுரீர் சுரீர் என்று குத்தும் வலி சரியாகும். (1393)

53. துளசி இலை, இஞ்சி, தாமரை வேர் ஆகியவை சேர்த்து அரைத்து கொதிக்க வைத்து விலாவில் பற்றிட்டால் விலா வலி சரியாகும்.  (1395)

54. துளசி இலையைக் பூங்கதிர்களுடன் எடுத்து அனலில் காட்டிப் பிழிந்துஇரு துளிகள் காதில் விட்டு வந்தால் காது மந்தம் தீரும்.  (1396)

55. துளசி இலைகளை அரைத்து உடலில் பூசிக்குளித்து வந்தால் நமைச்சல், சிரங்கு ஆகியவை தீரும்.  (1402)

56. துளசிச் சாறுடன் சிறிது தேன் கலந்து தீப் புண்கள் மீது தடவி வந்தால் அவை விரைந்து ஆறும்.  (1760)

57. துளசி இலைகளைப் பறித்து கசக்கி முகத்தில் மெல்லத் தேய்த்து, காயவிட்டு  சற்று நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் முகம் அழகு பெறும். (1791)

58. துளசியின் பூங்கொத்து, திப்பிலி வசம்பு ஆகியவற்றைப் பொடி செய்து சிறிது சர்க்கரை  சேர்த்து ஒரு சிட்டிகை எடுத்து தேனில் சாப்பிட்டு வந்தால் கக்குவான் இருமல் குணமாகும். (1398)

59. துளசி விதைகளைத் தூள் செய்து சாப்பிட்டு வந்தால் நரம்புகளில் ஏற்படும் வலி குணமாகும்.  (789)

60. துளசி விதை 100 கிராம், பன்னீர் 125 கிராம், சர்க்கரை 25 கிராம் எடுத்து ஒன்றாகக் கலக்கி சாப்பிட்டு வந்தால் இதய வலி குணமாகும்.  (1173)

61. துளசி விதை, அரச விதை ஆகியவற்றைக் காய வைத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் கணச் சூடு தீரும். (1391)

62. துளசி விதைப் பொடியைத் தாம்பூலத்துடன் சேர்த்துச் சுவைத்தால் தாது பலப்படும். (1399)

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
பாலு இராமச்சந்திரன்,
(baluramachandra83@gmail.com)
ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி.2051,சுறவம்(தை)28]
{11-02-2020}
--------------------------------------------------------------------------------------------------------------------------



2 கருத்துகள்:

  1. துளசிக்கு இத்துணை வலிமையா ? பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் ! வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
  2. துளசிச் செடியின் மேன்மையை மனிதகுலம் உணரவேண்டும் !

    பதிலளிநீக்கு