பெரியகுளம் பாலு இராமச்சந்திரன்

என் வீட்டுத் தோட்டத்தின் எழில் மலர்கள் !

செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

ஊடகத்தால் பயனேதும் உண்டோ ?

ஊடகத்தால் பயனேதும் உண்டோ !

------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய உலகில் ஒரு தனிமனிதன் வாழ்க்கைத் தரம் என்பது, பொருளாதார மேம்பாட்டில்தான் அமைகிறது என்றால், காலச் சூழலின் நடைமுறையில் சரியாகவேதான் காணப்படுகிறது !
அவ்வாறான நிலையை மனிதன் தக்கவைத்துக் கொள்வதற்காக தன் இலக்கைக் கூட மாற்றியமைப்பதற்குத்  தயங்குவதில்லை !

'உருபாக்களைக் கொண்டு உலகில் எதையும் சாதித்து விடலாம் !' என்ற நம்பிக்கை, பலரின் அதிகார ஆள்கையின் கொள்கைகளிலிருந்து வளர்ந்துவரும் தலைமுறையினர் கற்றுக் கொண்டிருக்கின்றனர் !

இப்படியே இப்பயணம் தொடருமாயின் எதிர்காலத்தில், இல்லறவியலில் நிகழக்கூடிய உறவுமுறைகள், ஒழுங்குமுறை, நற்கல்வியின் வழியாக ஏற்படும் பண்புநலன்கள், அன்பு இன்னபிற மனித குணங்கள் அனைத்தையும் உருபாக்களின் வடிவிலேயேதான் காணமுடியும் !

அதிகப்படியான மக்கள் ஊடகங்களின் செய்தியிலேயே கண்களை அகல விரித்து தம் ஆறாம் அறிவை தெரிவுசெய்து கொண்டுள்ளனர் !

அப்படிப்பட்ட ஊடகங்கள் அவர்களுக்கு எந்தமாதிரியான வழிகளைக் காட்டுகிறது?

வாழ்க்கையில் மக்களை  மடிமைகளாக்க வேண்டி ஆடம்பரப் பொருள்கள் பற்றிய விளம்பரங்களையும், அன்றாட நிகழ்வின் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற தாக்கத்தை ஏற்படுத்தவும், இயற்கையை அழித்து செயற்கையின்பால் மூழ்கடிக்கவும் இன்னும் பல அந்நிய நாட்டு மோகத்தீயில் ஆழ்த்தும் மொழியிலிருந்து நடத்தைகள் வரையிலான கடைப்பிடித்தல் வரை மக்களை திசைதிருப்பும் பணியைக் கச்சிதமாகச் செய்துகொண்டும் இருக்கிறது !

இதே போன்ற அனைத்துத் துறைகளிலும் பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இயங்கிக் கொண்டிருக்கும், இன வளர்ச்சி, மொழி வளர்ச்சி, சாதி வளர்ச்சி, கட்சி வளர்ச்சி இன்னமும் பல ஏராளமான அமைப்புகளும் இதற்கு ஒத்திசைந்தே வளர்ந்து வருகிறது !

ஒரு தனிமனிதனின் பொருள்பலம் மட்டுமே இருந்து விட்டால் போதும். அவர் ஒழுக்கம் தவறியவராக இருந்தாலும் சரி, கல்வி என்றால் என்ன என்பதே புரியாமல் இருந்தாலும் சரி, குமுகாய அக்கறையற்றவரானாலும் சரி, அவர் கரங்களால் கல்வி கற்றோரும் புகழ் படைத்தோரும் பரிசில் பெற வரிசை கட்டி நிற்கின்றார்கள் !

ஒரு வேளை இதன் காரணமாகத்தான் என்னவோ கற்றறிந்த புலவர்கள் எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் உள்ளார்கள் போலும் ! அரைகுறையாக கற்றோர்கள் புற்றீசலாய்த் தம் முகங்களை ஊடகங்களில் காட்டிக் கொள்ள பறக்கிறார்கள் போலும் !

நம் நாட்டின் தமிழ் மொழி நலிவடைகிறது ! நம் நாட்டின் ஊடகங்கள் அந்நிய மொழிகளுக்குத் தாலாட்டுப் பாடுகிறது !



நம் நாட்டின் இளந் தலைமுறையினர் திரைக் கதாநாயகர்களின் அட்டை உருவுக்குப் பால் முழுக்குச் செய்யும் துடிப்பான செயல்திறன்களை முகப்புப் பக்கத்தில் போட்டு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது !

இன்னமும் அறியாப் பச்சிளம் குழந்தைகளின் உடலுறவின் காணொளிக் காட்சிகளை உலகளாவிய முறையில் காட்டி தவறிழைக்காதவர்களையும் தவறைச் செய்யத் தூண்டுகிறது !

ஆக்கப்பூர்வமான கருத்துக்களை அதிகப்படுத்தாது அரட்டையடிக்கின்ற காட்சிகளை விரைவுபடுத்திக் கொண்டு செல்லும் ஊடகங்கள் வாழ்க !
இன்னமும் வளர்ந்து நாட்டை அயலானின் கைக்குள் அடக்கி வெற்றி நடை போடுக !

--------------------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
பாலு இராமச்சந்திரன்,
(baluramachandra83@gmail.com)
ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி.2051,சுறவம்(தை)28]
{11-02-2020}

----------------------------------------------------------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக