பெரியகுளம் பாலு இராமச்சந்திரன்

என் வீட்டுத் தோட்டத்தின் எழில் மலர்கள் !

வெள்ளி, 29 ஜனவரி, 2021

தமிழைக் காப்போம் !

 தமிழைப் பேணுவோம் !

-------------------------------------------------------------------------------------

தமிழானது

எப்படியெல்லாம்

மாறியிருக்கிறது

சமஸ்கிருதத்துக்கு!


பூவை புஷ்பமாக்கி

அழகை சுந்தராக்கி

முடியை கேசமாக்கி

தீயை அக்னியாக்கி

காற்றை வாயுவாக்கி

பிணத்தை சவமாக்கி

கெட்டதை பாவமாக்கி

முகத்தை வதனமாக்கி

அறிவைப் புத்தியாக்கி

அவையை சபையாக்கி

ஆசானைக் குருவாக்கி

இசையை சங்கீதமாக்கி

குண்டத்தை யாகமாக்கி

பெரியதை மஹாவாக்கி

மக்களை ஜனங்களாக்கி

நிலத்தை பூலோகமாக்கி

அமிழ்தை அமிர்தமாக்கி

அருள்மிகுவை ஶ்ரீ ஆக்கி

ஆடையை வஸ்திரமாக்கி

உணர்வற்றதை சடமாக்கி

ஓவியத்தை சித்திரமாக்கி

கலையை சாஸ்திரமாக்கி

விண்ணை ஆகாயமாக்கி

குளியலை ஸ்நானமாக்கி

தொழுதலை பூஜையாக்கி

தண்ணீரைத் தீர்த்தமாக்கி

மாணவனை சிஷ்யனாக்கி

வேண்டுதலை ஜெபமாக்கி

முறைகளை ஆச்சாரமாக்கி

பத்தாம் நாளை தசமியாக்கி

திருவிழாவை உற்சவமாக்கி

பருவமடைதலை ருதுவாக்கி

உறக்கத்தை நித்திரையாக்கி

திருமணத்தை விவாகமாக்கி

பயணத்தை யாத்திரையாக்கி

செருப்பை பாதரட்ஷையாக்கி

படையலை நைவய்தியமாக்கி

பள்ளிகளை வித்யாலயமாக்கி

பிள்ளைப்பேறை பிரசவமாக்கி

வணக்கத்தை நமஸ்காரமாக்கி

அன்பளிப்பை தட்சணையாக்கி

ஒன்பதாம் நாளை நவமியாக்கி

அறிவியலை விஞ்ஞானமாக்கி

படிப்பித்தலை அப்பியாசமாக்கி

கருவறையை கர்ப்பகிரகமாக்கி

வேளாண்மையை விவசாயமாக்கி

குடமுழுக்கை கும்பாபிஷேகமாக்கி

 

எப்படி எப்படியெல்லாம்  அழகு தமிழ்ச் சொற்கள்

அழிந்துள்ளன !

தமிழ் மொழியைக் கண் போலக் காப்போம் !

கருத்துடன்  பேணுவோம் !

இனியாவது விழிப்படைவோம் !

-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

பாலு இராமச்சந்திரன்,

Baluramachandra83@gmail.com

உறுப்பினர்

தமிழ்ப் பணி மன்றம்

[தி.பி.2052, சுறவம் (தை) 12[

{25-01-2021}

-------------------------------------------------------------------------------------

 

 

ஞாயிறு, 15 மார்ச், 2020

எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை !!

எந்நோய்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை இந்நோய்க்கு !!

----------------------------------------------------------------------------------------

புதுக்குறளில் “கொரோனா” !எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
இந்நோய்க்கு இன்றே உணர்.

தொட்டனைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு
கட்டியணைத்து பரவும் தவிர்.

கைகூப்பிக் கரம் சேர்த்து வணங்குதல் நன்று
மெய் கூப்பி வள௫ம் வாழ்வு

துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை
துப்புபவர்கள் துப்பாமை நன்று.

இ௫மலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும்
இ௫ப்பது அறிகுறியென உணர்.

கூட்டம் கும்பலில் சேராமல் இ௫ப்பது
சாலச் சிறந்ததாம் இந்நாளில்.

கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று
காத்திடும் நோயிலின்று உன்னை.

கடல்கடந்து வந்தாலே கடமையே உன்
உடல் பரிசோதிப்பது நன்று.

ம௫ந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை
மாற்றம் காண்பது நன்று.

கைகொண்டு புறம் தொட வேண்டாம் கழுவிய பின்
மெய் தொடுதல் நன்று.

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

பாலு இராமச்சந்திரன்
(baluramachandra83@gmail.com)
ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்
தமிழ்ப் பணிமன்றம்
[தி.பி.2051,கும்பம் (மாசி) 28]
{1/03/2020}
-----------------------------------------------------------------------------------------

மதிப்பிற்குரிய “கொரோனா”வே வருக ! !

மதிப்பிற்குரிய ''கொரானாவே'' வருக..!!

--------------------------------------------------------------------------------------------------------------------------


மதிப்பிற்குரிய ''கொரானாவே'' வருக..!!
இந்தியர்களின்
உயிர் வேண்டுமா உனக்கு...
வரிசையில் நில்..
கண்ணுக்கு முன்னே...
துப்பாக்கி ஏந்தி கலவரம் செய்யும் கொலைகாரனையோ..
கடைகளுக்கு நெருப்பு வைக்கும் கொள்ளைக்காரனையோ..
பெண்களை வல்லுறவில் கொள்ளும் பயங்கரவாதிகளையோ..
தடுக்காத தேசம் ..
கண்ணுக்கு தெரியாத உன்னை மட்டும்,
தடுக்கவா போகிறது...?
கொரானாவே' வரிசையில் நில்..!
மதங்களுக்காகவும்.. ஜாதிகளுக்காகவும்..
மக்கள் கொல்லப்படுவார்கள்..
கனிம வளங்களுக்காக.. பழங்குடிகள் கொல்லப்படுவார்கள்..
கல்வி நிலையங்களில் மாணவர்கள் கொல்லப்படுவார்கள்..
அரசியல் வாதிகளுக்காக தொண்டர்கள். கொல்லப்படுவார்கள்..
கூலி உயர்வு கேட்ட தொழிலாளிகள் கொல்லப்படுவார்கள்..
விலை பொருளுக்கு விலையில்லாமல்..
விவசாயிகள் கொல்லப்படுவார்கள்..
வட்டிக்கட்ட முடியாத வறியவர்கள் கொல்லப்படுவார்கள்...
சிகிச்சைக்கு பணமில்லாமல் நோயாளிகள் கொல்லப்படுவார்கள்..
தரமற்ற சாலைகளால்.. பயணிகள் கொல்லப்படுவார்கள்..
வரதட்சணை கொடுக்காத கன்னியர்கள் . கொல்லப்படுவார்கள்..
கள்ளிப்பால் கொடுத்து சிசுக்கள் கொல்லப்படுவார்கள்...
மலக்குழிகளுக்குள் இறங்கிய மானிடர்கள்..கொல்லப்படுவார்கள்..
உரிமைக்காக குரல் கொடுக்கும் உத்தமர்கள்... கொல்லப்படுவார்கள்...
இதற்க்கு பிறகும் மிச்சம் இருந்தால்..
நீயும் கொல்..
அதுவரை.. வரிசையில் நில்...!!


--------------------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

பாலு இராமச்சந்திரன்
தமிழ்ப் பணிமன்றம்
(baluramachandra83@gmail.com)
[தி.பி.2051,மீனம்(பங்குனி) 01]
{14/03/2020.}
--------------------------------------------------------------------------------------------------------------------------

சனி, 22 பிப்ரவரி, 2020

பாலு இராமச்சந்திரன் - வாழ்க்கை வரலாறு !


பாலு இராமச்சந்திரன்

[தமிழ்ப் பணி மன்றத்தின் தாரகை !

-----------------------------------------------------------------------------------------------------------------------------

தோற்றம்:

தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், எண்டப்புளி என்னும் ஊரில் 1980 ஆம் ஆண்டு, ஏப்பிரல் திங்கள், 19 ஆம் நாள் இராமச்சந்திரன் பிறந்தார். பெரியகுளத்திலிருந்து வத்தலக் குண்டு செல்லும் சாலையில் 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இவ்வூரின் அருகில் முருகமலை என்னும் வனப்பு மிக்க மலை அமைந்துள்ளது. இவ்வூரிலிருந்து பார்த்தால் கொடைக்கானல் மலையின் எழில்மிகு தோற்றம் கண்களுக்குத் துல்லியமாகத் தெரியும். இராமச்சந்திரனின் தந்தையார் பெயர் பாலுச்சாமி. தாயார் பழனி அம்மையார் !

உடன்பிறப்புகள்:

இவருடன் உடன்பிறந்தோர் நால்வர். தமையனார் பெயர் கிருட்டிணசாமி, தமக்கையார் அழகம்மை, தம்பியர் கண்ணதாசன், மற்றும் அழகர்சாமி ! அனைவருக்கும் திருமணமாகித் தத்தம் குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகின்றனர் !

பள்ளிக் கல்வி:

ஐந்து அகவை ஆகும் போது இராமச்சந்திரன் தனது கல்வி உலாவைத் தொடங்கினர். எண்டப்புளியியிலேயே இயங்கி வந்த சிறீ மார்க்கண்டேயா தொடக்கப் பள்ளியில் 1985 ஆம் ஆண்டு முதலாம் வகுப்பில் அடியெடுத்து வைத்தார் ! இப்பள்ளியிலேயே ஐந்தாம் வகுப்பு வரைப் பயின்ற இவர் , தனது உயர்நிலைப் பள்ளிக் கல்விக்காக பெரியகுளம் செல்ல நேர்ந்தது. இங்குள்ள விக்டோரியா அரசி அரசினர் மேனிலைப் பள்ளியில் 1990 ஆம் ஆண்டு சூன் மாதம் ஆறாம் வகுப்பில் சேர்ந்து பயிலத் தொடங்கினார் !

இவரது கல்வி உலாவில் அவ்வப்போது தடைகள் பல தோன்றினாலும் அவற்றை எல்லாம் கடந்து வெற்றிகரமாக நடை பயின்ற இவர், 9 –ஆம் வகுப்புப் படிக்கையில் ஏனோ சோர்வடைந்தார்.  ஆண்டுத் தேர்வு என்னும் தடையைக் கடக்க முடியாமல் தளர்ந்து போனார். தேர்வில் தோல்வியடைந்தார் !

இவரது கல்வியில் அக்கறை கொண்டிருந்த தந்தையார் பாலுச்சாமி, என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார்.; மும்முரமாகச் சிந்தித்தார். இறுதியில், பள்ளி மாற்றம் இதற்குத் தீர்வாக அமையும் என்று நம்பினார். எண்டப்புளியிலிருந்து  5  கி.மீ. தொலைவில் உள்ள வடுகப்பட்டி அரசினர் மேனிலைப் பள்ளியில்  தன் மகனை 1994 ஆம் ஆண்டு 9 ஆம் வகுப்பில் சேர்த்துப் படிக்க வைத்தார். புதிய பள்ளி ! புதிய சூழ்நிலை ! இராமச்சந்திரனுக்குப் படிப்பில் நாட்டம் ஏற்பட்டது ! வகுப்பில் சிறந்த மாணவனாகத் திகழத் தொடங்கினார். இறுதியில் 1998 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்களில் தனது மேனிலைக் கல்வியை (12 ஆம் வகுப்பு) அதிக மதிப்பெண்கள் பெற்று நிறைவு செய்தார் !

கல்லூரிக் கல்வி:

தந்தையார் பாலுச்சாமி, தன் மகன் பட்டதாரியாக இந்தக் குமுகாயத்தில் பெருமையுடன் நடமாட வேண்டும் என்று ஆசைப்பட்டார்.  இதற்காக எத்துணை இன்னல்கள் வந்தாலும் அவற்றை எதிர்கொள்ள அணியமானார். விளைவு ? தன் மகனையும் அழைத்துக்கொண்டு 65 கி.மீ தொலைவில் உள்ள  உசிலம்பட்டியில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் கலைக் கல்லூரிக்குச் சென்று, கல்லூரி முதல்வரைச் சந்தித்து உரையாடினார். கல்லூரியில் இடம் கிடைத்தது. வணிகப் பொருளியல் வாலை (BACHELOR OF BUSINESS ECONOMICS)  வகுப்பில் 1998 - ஆம் ஆண்டு சூன் மாதம் சேர்ந்து பயிலத் தொடங்கினார் !

திருமணம்:

கல்லூரியில் இரண்டாம் ஆண்டை நிறைவு செய்திருந்த நிலையில் வீட்டில் திருமணப் பேச்சு முளைவிடத் தொடங்கியது. இவர் வாழ்ந்து வரும் அதே எண்டப்புளியில் இன்னொரு பகுதியில் வாழ்ந்து வந்த பழனிவேல்சரசுவதி அம்மையார் இணையினரின் ஒரே மகளான  திருமலைச் செல்வியை இராமச் சந்திரனுக்குத் திருமணம் செய்விக்கலாம் என்று கருதி இரு வீட்டாரும் கலந்து பேசத் தொடங்கினர்.  இறுதியில், படிப்பும் தொடரட்டும், திருமணமும் நடக்கட்டும் என்று முடிவு செய்து 2000 –ஆம் ஆண்டு, சூலைத் திங்கள் 12 ஆம் நாள் இருவரையும் இல்லற வாழ்வில் இணைத்து வைத்தனர் !

பட்டப் படிப்பு:

திருமணத்திற்குப் பிறகும் இராமச்சந்திரன் படிப்பைத் தொடர்ந்து, பயின்று, பட்டம் பெற்று, தந்தையார் பாலுச்சாமி அவர்களின் கனவை நிறைவேற்றி வைத்தார் . கையில் பட்டம் ! மனதில் என்னென்னவோ திட்டம் !

பணிவாய்ப்புத் தேடல்:

படித்தவர்களுக்கெல்லாம் இந்த நாட்டில் வேலை கிடைத்து விடுகிறதா என்ன ? இராமச்சந்திரன் கடுமையாக முயன்றார். திருப்பூர், பல்லடம், கோவை, தென்காசி, திருநெல்வேலி, தேனி என்று இவர் வேலை தேடி அலைந்த ஊர்களின் பட்டியல் நெடியது. அங்கெல்லாம் தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகள் கிடைத்தாலும், போதுமான ஊதியம் கிடைக்கவில்லை !

தந்தை மறைவு:

குடும்ப ஓடம் மனிதக் குமுகாயம் என்னும் ஆற்றில் மெல்ல ஆடி அசைந்து சென்று கொண்டிருக்கையில், இவரது தந்தையார் பாலுச்சாமி 2007 ஆம் ஆண்டு கதுமென (திடீரென) மறைந்து போனார். தந்தையின் பிரிவு இராமச்சந்திரனை நிலைகுலைந்து போகச் செய்தது. தந்தை மீது இவருக்கும், இவர் மீது தந்தைக்கும் இருந்த பற்று (பாசம்) என்னும்  கயிறு மிகவும் வலுவானது. அறுவாதது; அறுக்கவும் முடியாதது. இதன் தாக்கம், இராமச்சந்திரனுக்குக் குடும்பத்தின் மீதான பிணைப்பு குலைந்து போய்விடுமோ என்று உற்றார் உறவினர்கள் அச்சப்படுமளவுக்கு இட்டுச் சென்றது. எனினும் இந்த வீட்சியிலிருந்து தானே மீண்டெழும் அளவுக்கு அவருக்கு மன உறுதி மறுபிறவி எடுத்தது இன்னும் வியப்புக்குரிய ஒன்றாகவே இருக்கிறது !

சொந்தத் தொழில்:

அரசியல் சூழ்ச்சிகளால் அலைப்புற்றுக் கிடக்கும் தமிழ்நாட்டில், தனக்கு அரசு வேலை கிடைக்காது என்பதைப் புரிந்து கொண்ட இராமச்சந்திரன், அடுத்தவனிடம் ஐயாயிரம் உருபாவுக்கு அடிமை வேலை செய்வதை விட, சொந்தமாகத் தொழில் செய்து வருமானம் தேடலாம் என்னும் முடிவுக்கு வந்தார். சொந்த ஊரிலேயே பால் வணிகராக வலம் வரத் தொடங்கினார். பால் கறவை மையங்களுக்குத் தன் பேடுருளியில் (MOPED) சென்று, பாலைச் சேகரித்துக் கொண்டு வந்து, தன் வீட்டருகே பால் விற்பனையகம் (MILK BOOTH) தொடங்கி நடத்தி வருகிறார். நாளொன்றுக்கு 150 லிட்டர் வரை விற்பனையாகிறது !

எதிர்காலத் திட்டம்:

பால் விற்பனையுடன், இதர பாற் பொருள்களான (MILK PRODUCTS) தயிர், நெய், பால் கோவா  ஆகிவற்றையும் தன் விற்பனையகத்தில் (MILK BOOTH) கிடைக்கச் செய்யவேண்டும் என்பது இவரது திட்டம். மாவட்டத் தொழில் மையம் மூலம் இதற்கான நயனுரை (ADVICE) பெறவும் திட்டமிட்டிருக்கிறார். இதற்காகப் பயிற்சி வகுப்புகள் நடத்தப் பெற்றால் அதில் கலந்து கொள்ளவும் திட்டமிட்டிருக்கிறார் !

குடும்பம்:

இராமச்சந்திரன்திருமலைச் செல்வி இணையருக்கு அர்சவர்த்தினி (18), விட்டுணுதாசு (விண்ணவதாசன்) (17) என இரு மக்கள் செல்வங்கள் இருக்கின்றனர்.  மகள் 12 –ஆம் வகுப்பிலும், மகன் 11-ஆம் வகுப்பிலும் எ.புதுப்பட்டி மேனிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர். பிள்ளைகளுக்கு  ஏட்டுப் படிப்பு மட்டும் போதாது என்பதை உணர்ந்த இவ்விணையர், அவர்களுக்குப் பிடித்தமான தொழிற் பயிற்சி வகுப்புகளில் சேர்த்து பயிற்சி பெற வைக்கவும் திட்டமிட்டு வருகின்றனர் !

தமிழார்வம்:

இராமச்சந்திரனுக்கு இயல்பாகவே தமிழ் மீது பற்று அதிகம். அதனால் சொக்கி என்னும் காலாண்டு இலக்கிய இதழை, இவர் நீண்ட காலமாக நடத்தி வருகிறார். தனி இதழ் விலை உருபா 25-00. இருநூறு  படிகள் அச்சிட்டு பெரியகுளம், தேனி மற்றும் அவற்றின் சுற்று வட்டாரங்களில் பெட்டிக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. அத்துடன் தமிழ்ப் பணி மன்றம் என்னும் முகநூற் குழுவில் உறுப்பினர் ஆன பின்பு, தமிழார்வம் இவருக்குக் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிவிட்டது. பாடல்கள் புனையவும், பாட்டரங்கங்களில் கலந்து கொண்டு பாடல்கள் படைக்கவும் திறன் பெற்றுள்ள இராமச்சந்திரன், தமிழ்த் தாயின் முன்னணித் தொண்டர் என்பதில் ஐயமில்லை !

வலைப்பூ:

தனது படைப்புகளைப் பாதுகாக்கவும், பிறருடன் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பாக இவர் பெரியகுளம் பாலு இராமச்சந்திரன் என்னும் வலைப்பூவை (BLOG) நிறுவிப் பேணி வருகிறார். வலைப்பூ முகவரி : http://thamizhkulam.blogspot.com .பத்தோடு பதினொன்றாக இருப்பதை விட , ஆயிரத்தில் ஒருவராக இருப்பதில் தான் இவருக்கு ஆர்வம் அதிகம் !

முடிவுரை:

தொழிற்திறன் வல்லமை பெறும் வாய்ப்புகளைப் பெறாமல், ஏட்டுக் கல்வி வாய்ப்பை மட்டுமே பெற்றதால், வாழ்க்கையில் நிரம்பவும் இன்னற் பட்டிருக்கிறார் இராமச்சந்திரன். அவர் எதிர்கொண்ட இன்னல்களை அவரது மக்கள் செல்வங்களும் நேர்கொள்ளக் கூடாது. எனவே இருவரையும் அவர்களுக்குப் பிடித்த தொழிற் பயிற்சிகளில் சேர்ந்து பயிற்சி பெறும் வாய்ப்பை ஏற்படுத்தித் தர முயல்வார் என நம்புகிறோம். வாழ்க தமிழ்த் தொண்டர் இராமச்சந்திரன் ! வாழிய அவரது மனைவியும் மக்களும் ! வாழ்வில் அனைத்து வளங்களையும் பெற்று இராமச்சந்திரன் குடும்ப உறுப்பினர்கள் நீடுழி வாழ்க என வாழ்த்துவோம் !

தொடர்புகொள்ள:

பாலு இராமச்சந்திரன்,
ஆர்.டி.யூ.காலனி,
எண்டப்புளி அஞ்சல்,
பெரியகுளம் வட்டம்,
தேனி மாவட்டம்,
.குஎண் 625604.
எழினி - 8754711841
மின்னஞ்சல் bramji319@gmail.com

-----------------------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
பாலு இராமச்சந்திரன்
(baluramachandra83@gmail.com)
ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி.2051,கும்பம்(மாசி)09]
{21-02-2020}

-----------------------------------------------------------------------------------------------------------------------------வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

நம்மில் ஏன் ஒற்றுமை இல்லை ?

நம்மில் ஏன் ஒற்றுமை இல்லை ?-------------------------------------------------------------------------------------------------------------------------------------------


நம் இல்லத்தில் உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை இன்றிப் போனது ! இதன் தொடக்கமே உறவினர்களிடம் பகைமை உணர்வும் தொடர்ந்து விடுகிறது !
விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கின்றி பழிவாங்கும் படலம் ஒவ்வொருவரிடத்தும் நிலைக்கிறது !


ஆனால் புதிதாகப் பழகும் ஆளினர்கள் தன் இல்லத்தே வந்துவிட்டால் போதும், அவர்களுக்குச் செய்யும் பணியினைப் பார்க்கும் உடன்பிறந்தவர்களின் மனதில் இன்னும் விரிசல்தான் !


இதுகூட ஒரு வகையில் திருமணத்திற்கு முன் உள்ள காதல், மணவாழ்க்கைக்குப் பின் இல்லாமல் துன்பத்திற்கு உட்பட்டது போல்தான் எனலாம் !

கிழிந்த ஆடைகளை இணைப்பது நூல் ஆகும் ! அந்நூலின் இருபக்க முனைகளை இணையர்கள் எதிரெதிர் பக்கம் இழுப்பதாக வைத்துக்கொள்வோம் ! நூல் என்னவாகும் ? அறுந்துவிடும் அல்லவா !


மாறாக, இணையரில் ஒருவர் தம் பக்கம் நூலை இழுக்கையில், இன்னொருவர் இழுப்பவரின் முன்னரே சென்றால் நூல் அறுபடுமா ? அறுபடாதுதானே !

அதுபோல, வாழ்க்கை என்பது, இல்லத்தின் தாத்தா, பாட்டி, கணவன், மனைவி, அண்ணன், தம்பி,அக்காள், தங்கை, மாமா மாமி, சித்தப்பா, பெரியப்பா, பெயரன், பெயர்த்தி, என விட்டுக்கொடுத்துச் சென்றால் இல்லம் சிறக்கும் !

இதுதான், "இல்லறமே நல்லறம்"!


ஆனால் இன்றோ, பண்பாடு நிறைந்த நம்நாட்டில் இவைகளெல்லாம் தலைகீழாக உள்ளது !

தமிழ்மொழி மூலமாக சிறந்து விளங்கிய ஒற்றுமை வேற்றுமொழிகளால் பிரிந்து கிடக்கிறது !


தமிழ் பேசினால் தரம் குறைவு என்று எண்ணுகிறார்கள் !
ஆங்கிலமும் இந்தியும் இன்னபிற மொழிகள் பேசினால் உயர்வு என்று நினைக்கிறார்கள் !


ஆதலாலே, இன்று தமிழனுக்குத் தமிழன் எதிரியானான் ! வேற்றவனுக்குக்கூட மடிமையாகி அவன் என்ன சொன்னாலும் செய்வதற்கு தயாராக இருக்கிறான் !


வீட்டை மறந்து, இனத்தை மறந்து, பகட்டிற்கு மயங்கி உரிமையை விட்டுக் கொடுக்கிறான் !


இதில் "இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை" என்று வெட்கமில்லாமல் பாடல்களைப் படித்துத் திரிகிறோம் !


உன் வீட்டின் நடவடிக்கைகளை உன் வீட்டினர்தான் தீர்மானிக்க வேண்டும் !

சிந்தித்துப் பார்த்து செய்கையை மாற்று

சிறிதாய் இருக்கையில் திருத்திக் கொள் !

------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் & இடுகை

பாலு இராமச்சந்திரன்.
(baluramachandra83@gmail.com0
தமிழ்ப் பணிமன்றம்
[தி.ஆ.2051கும்பம்(மாசி)01.
{13-02-2020}

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வியாழன், 13 பிப்ரவரி, 2020

வள்ளுவத்தில் வாய்மை !


வள்ளுவத்தில் வாய்மை !

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

உண்மை, வாய்மை, மெய்ம்மை மூன்றுமே ஒன்று போல் தோன்றும்; ஆனால் அவற்றுக்கிடையே பொருள் வேறு பாடு இருக்கிறது. இதைப் புரிந்து கொண்டு ஒழுகுதல் மாந்தர்க்குச் சிறப்பைத் தரும் !

கதிரவன் வானில் நிலை கொண்டிருப்பது உண்மை ! அதை உள்ளது உள்ளபடி அப்படியே எடுத்து உரைப்பது வாய்மை ! கதிரவன் இல்லையேல் இவ்வுலகில் உயினங்களே இருக்க முடியாது என்பது மெய்ம்மை !

வாய்மையைப் பற்றி வள்ளுவர் பத்து குறள்களைப் படைத்து இருக்கிறார். யாருக்கும் தீமை விளைவிக்காத செய்திகளை நாம் சொல்வதும் (01), பொய்தான் என்றாலும் கூட அதனால் நன்மை விளையுமெனில், அதைச் சொல்வதும் (02), வாய்மையே என்கிறார் வள்ளுவர் !

மனதில் இருப்பதை ஒளிக்காமல் உரைக்கும் செயல், தவமும் தானமும் செய்வதை விட உயர்வானது (03) என்பது அவரது உயரிய நோக்கு. அதே போல், மனிதன் தன் உடல் அழுக்கை நீரால் கழுவலாம்; ஆனால் உள்ளத்து அழுக்கை வாய்மையால் தான் அகற்றமுடியும் (04) என்று அவர் இன்னொரு குறள் மூலம் உலகுக்கு அறிவிக்கிறார் !

உலகத்தோரே ! யாம் உய்த்து உணர்ந்தவற்றுள், வாய்மையைப் போல் சிறப்பித்துக் கூறும் தன்மைகள் உள்ளவை வேறெதும் இவ்வுலகில் இல்லை (05) என்று எத்துணை அழுத்தமாகப்ப் பத்தாவது குறளில் பகர்கிறார் நம் செந்நாப் போதார் !

வாய்மைஎன்பதற்கு வள்ளுவரைப் போல் இலக்கணம் கூறுபவர் வேறு யாரும் இருக்க முடியாது. தமிழ் மறை தந்த இத் தகவுடை அறிஞன் வழியில் நடப்போம். நன்மைகளை அடைவோம் ! வாழ்க வள்ளுவம் ! வாழிய செந்தமிழ் !

----------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
பாலு இராமச்சந்திரன்.
(bramachandra83@gmail.com)
ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்.
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி.2051,கும்பம்,(மாசி)01]
{13-02-2020}
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

தமிழுக்கும் அமுதென்று பேர் !


எனக்குப் பிடித்த பாடல் ! - தமிழுக்கும் அமுதென்று பேர் !

[இயற்றியவர்: பாவேந்தர் பாரதி தாசன்}

-------------------------------------------------------------------------------------------------


                         தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
                         தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
                         தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
                         தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
                         தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
                         தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
                         தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
                         தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
                                                                  (தமிழுக்கும் அமுதென்று)

                         தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
                         தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
                         தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
                         தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
                         தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
                         தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
                         தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
                         தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
                                                                 (தமிழுக்கும் அமுதென்று)                                                                


--------------------------------------------------------------------------------------------------ஆக்கம் + இடுகை,
பாலு இராமச்சந்திரன்,
(baluramachandra83@gmail.com)
ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி.2051,சுறவம்(தை)28]
{11-02-2020}

-----------------------------------------------------------------------------------------------------------------